புதுடில்லி, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு அளித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், உத்தவ் மீது அதிருப்தி அடைந்த 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்தனர்.
பின், பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அதன் வில் அம்பு சின்னத்துக்கு, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உரிமை கோரி வந்தது.
இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில், உத்தவ் தாக்கரே அணியினர் மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்டது.
கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், சிவசேனா பெற்ற ஓட்டுகளில் 76 சதவீதத்தை வைத்திருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் ஷிண்டேவின் பக்கம் இருப்பதால், அவரது அணியே உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கியது.
இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, ”சிவசேனா கட்சியின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு ஷிண்டே அணியினர் உரிமை கோரக் கூடாது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,” என, உத்தவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
இதையடுத்து, ”தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இல்லாத நடவடிக்கையை ஷிண்டே தரப்பு மேற்கொண்டால், உத்தவ் தாக்கரே தரப்பு நீதிமன்றத்தை நாடலாம்,” என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ”சிவசேனாவின் கட்சி அலுவலகம், வங்கி கணக்குகளுக்கு உரிமை கோர மாட்டோம்,” என, ஷிண்டே தரப்பும் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
இதற்கிடையே, பிப். 26ல் நடக்கும் மஹாராஷ்டிரா சட்டசபை இடைத்தேர்தலில், சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து உத்தவ் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீது, இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு ஷிண்டே தரப்புக்கு, ‘நோட்டீஸ்’ அளித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு விசாரணையை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, உச்ச நீதிமன்றம் முதல்முறையாக குரல் வழி பதிவு செய்தது.
மனுதாரர்கள் கேட்கும்பட்சத்தில் விசாரணை யின் குரல் பதிவு மற்றும் எழுத்து வடிவ ஆவணங்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்