ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து நேற்று பிரச்சாரம் செய்தார். காவேரி சாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது. அதற்காக பேரணி சென்றநிலையில் வாகனத்தில் நின்றபடி சீமான், வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
வீரப்பசத்திரம் சாலை அருகே சென்றபோது சிலர் சீமான் வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினர். இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். மேலும் 3 போலீஸாரும் அதில் காயமடைந்தனர். நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில், திமுகவைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. துணை ராணுவ படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன்பின், பொதுக்கூட்டத்தில் பேசவந்த சீமானை சந்தித்த போலீஸார் பொதுக்கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
போலீஸின் வலியுறுத்தலை அடுத்து, சீமான் 10 நிமிடம் மட்டும் பேசி வாக்கு சேகரித்துவிட்டு கீழே இறங்கினார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காயமடைந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய காவல்துறையினர், சூழலை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவித்தனர்.