ஈரோடு, ரங்கம்பாளையத்திலுள்ள பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் சீட்டு மற்றும் சங்கங்களின் பதிவு அலுவலகத்தில் சார்-பதிவாளராகப் பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி (55). ஆடவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சீட்டு நிறுவனம், நிதி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை ஆண்டுதோறும் சரிபார்த்து அவற்றை புதுப்பித்துத் தருவது இவரது முக்கியப் பணியாகும். அனைத்துப் பதிவு பணிகளையும் ஆய்வுசெய்து, அதை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யும் பணியில் இவரின் உதவியாளராக இருக்கும் தமிழ்செல்வன் (40) ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் தினந்தோறும் சுய உதவிக்குழுக்களின் பணிகள் தொடர்பான ஆவணங்களையும், நிதி நிறுவனத்தின் கணக்குகளையும் சரிபார்த்து புதுப்பிக்க ஒப்புதல் தர ஓர் ஆவணத்துக்கு ரூ.6,000 வீதம் சார்-பதிவாளர் ராஜேஸ்வரிக்கும், அதை அப்லோடு செய்யும் அவரின் உதவியாளர் தமிழ்செல்வனுக்கு ரூ.1,500 வீதம் லஞ்சம் தர வேண்டுமாம்.
இந்த நிலையில், சுய உதவிக்குழுக்களின் புதுப்பித்தல் பணிகளை தனியார் மூலமாக செய்து தரும் நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ், ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் சார்-பதிவாளர் ராஜேஸ்வரி குறித்து புகாரளித்தார்.

அந்தப் புகாரில் சுரேஷ், “என்னிடமிருந்து பெறப்பட்ட நான்கு சுய உதவிக்குழுக்களின் கணக்குகளைச் சரிபார்த்து தருவதற்காக ராஜேஸ்வரி ஒரு குழுவுக்கு 6,000 வீதம் 24,000 ரூபாயும், உதவியாளர் தமிழ்செல்வனுக்கு 1,500 வீதம் 6,000 ரூபாயும் என மொத்தம் ரூ.30,000 லஞ்சமாக வழங்குமாறு ராஜேஸ்வரி கேட்டார். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ராஜேஸ்வரிமீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்து, ரசாயனம் தடவிய 30,000 ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து அனுப்பினர். இன்று, ராஜேஸ்வரியிடம் அந்தப் பணத்தைக் கொடுக்க சுரேஷ் சென்றபோது உதவியாளர் தமிழ்செல்வனிடம் தருமாறு ராஜேஸ்வரி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து தமிழ்செல்வனிடம் பணம் ரூ.30,000 கொடுத்து விட்டு, சுரேஷ் சமிக்ஞை செய்திருக்கிறார்.
அப்போது அங்கு மறைவாக இருந்த போலீஸார், தமிழ்செல்வனை சுற்றி வளைத்து ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அலுவலகத்தின் அறையை மூடிவிட்டு பல மணி நேரம் அங்கு சோதனை செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்கச் சொன்ன சார்-பதிவாளர் ராஜேஷ்வரியையும், அவரின் உதவியாளர் தமிழ்செல்வனையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராஜேஷ் நம்மிடம் கூறுகையில், “சார்-பதிவாளர் ராஜேஸ்வரியின் இல்லம் கோவையில் இருக்கிறது. அங்கும், அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறும். இந்தச் சோதனையின் முடிவில்தான் அவருக்கு எங்கெங்கு சொத்துகள், பணம், நகைகள் இருக்கின்றன என்ற விவரங்கள் தெரியவரும்” என்றார்.