கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பணியிட மாற்றத்தை கண்டித்து, 150 அடி செல்போன் டவர் மீது ஏறி ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் மணிவேல்(33). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் ஆயுதப்படை மைதானம் அருகே குட்டூரில் உள்ள 150 அடி உயர செல்போன் டவர் மீது சீருடையுடன் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். இதை அவ்வழியாக சென்ற போலீசார், பொதுமக்கள் பார்த்து எஸ்பி அலுவலகத்திற்கு தெரிவித்தனர். போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு படையினர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணிவேல், ‘கடந்த 9ம் தேதி என்னையும் சேர்த்து 9 ஆயுதப்படை போலீசாரை திடீரென்று கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாக கூறினார்கள். நான் எந்தவித விருப்ப மனுவும் கொடுக்காத நிலையில், மாற்றியுள்ளனர். இதுபற்றி 13ம் தேதி கோவையில் ஐ.ஜி.யை சந்தித்து முறையிட்டோம். அவர் 1,400 போலீசார் இருக்கும்போது உங்களை எதற்காக எஸ்பி இடமாற்றம் செய்ய சொல்கிறார் என கேட்டார். பின்னர் எஸ்பி.யை சந்தித்து மனு கொடுத்தோம். அவரும் எங்களை இங்கேயே வேலை பார்க்க சொன்னார். ஆனால், ஆயுதப்படை உயர் அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து தான் இங்கு வந்துள்ளோம். இந்நிலையில் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் விதமாக, எங்களை இடமாற்றம் செய்துள்ளார்கள். அதனால் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்றார். இந்த பிரச்னையை பேசி தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்தபின் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு, 11 மணி அளவில், மணிவேல் கீழே இறங்கி வந்தார்.