கோவை: சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கோவையில் நகைப் பட்டறை மிகுந்த பகுதிகளில் தங்கியிருந்து இந்த தங்கத் துகள்களை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த பாலன் (40) என்பவரும் உக்கடம் பகுதியில் தங்கி தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். பாலனுக்கு உடல்நிலை சரியில்லாததையடுத்து தந்தைக்கு உதவி செய்வதற்காக அவரது மகன் விக்னேஷ் (13) நாமக்கல்லில் இருந்து கோவை வந்து ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று உறவினர்கள் சிலருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சாக்கடையில் இருந்து விஷ வாயு தாக்கி விக்னேஷ் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
