பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதிலும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத்தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
சென்ற அத்தியாயத்தில், தாய்ப்பால் எவ்வாறு சுரக்கிறது, மன அழுத்தம் தாய்ப்பால் சுரத்தலில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது, தாய்ப்பால் சுரத்தலை எவ்வாறு அதிகரிப்பது போன்றவை குறித்து விரிவாகக் கண்டோம். அடுத்ததாக, தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து, இந்த வாரம் விரிவாகக் காண்போம்.
தாய்ப்பால் கொடுக்கும்போது என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
மார்பகங்களில் பால் கட்டுவது (Breast Engorgement):
குழந்தை பிறந்ததில் தொடங்கி, இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் இருந்து தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பது தாமதமானாலோ, போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காததாலோ, தாய்ப்பால் கொடுக்கும்போது தவறுதலான நிலை மற்றும் இணைப்பு இருந்தாலோ (improper positioning and attachment), பால்சுரப்பிகளில் தாய்ப்பால் அதிகளவு சேர்ந்துவிடும்.
தாய்ப்பால் சுரப்பு மேலும் அதிகரிக்கும்போது, பால்சுரப்பிகளில் தாய்ப்பால் சேமிக்கும் திறனுக்கு மேலே, தாய்ப்பால் சேர்ந்து கொண்டு, மார்பகங்களில் பால் கட்டிக் கொள்கிறது. மார்பகங்களில் இவ்வாறு பால் கட்டிக் கொள்ளும்போது, மார்பகங்களில் வீக்கம் மற்றும் மிகுந்த வலி ஏற்படுகிறது.

பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
மார்பகங்களில் பால் கட்டிக் கொண்டால், வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது, பால் வெளியேற்றுதலை அதிகரிக்கும். 2-3 மணிநேரத்திற்கு ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை (Four Steps of Positioning and Attachment) உறுதி செய்ய வேண்டும். ஐஸ் ஒத்தடம் கொடுக்கும்போது, மார்பக வீக்கம் மற்றும் வலி குறையும்.
ஒரு மார்பகத்தில் உள்ள தாய்ப்பாலை முழுமையாக் கொடுத்து முடித்த பிறகு தான், அடுத்த மார்பகத்தில் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும். குழந்தை பசியாறி விட்டால், தானாகவே மார்பகத்திலிருந்து தனது வாயை எடுத்து விடும். அதன்பிறகு நன்றாக 2-3 மணிநேரம் தூங்கும். அடுத்த முறை, பாதியிலே விடுபட்ட மார்பகத்தில் இருந்துதான் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும். மாறாக ஒரு மார்பகத்தில் உள்ள தாய்ப்பாலை முற்றிலும் தராத பட்சத்தில், மார்பகத்தில் மேலும் தாய்ப்பால் கட்டிக் கொள்ளும்.

மார்பகங்களை மசாஜ் செய்யும்போது வீக்கம் மற்றும் வலி குறையும். மார்பக வலி அதிகமாக இருந்தால், மருத்துவர் அறிவுறுத்திய வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால், விரல்களைக் கொண்டோ அல்லது மார்பக பம்பை (Breast Pump) கொண்டோ தாய்ப்பாலை வெளியேற்ற வேண்டும்.
2-3 மணிநேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும், ஒரு மார்பகத்தில் உள்ள தாய்ப்பால் முழுமையாகக் கொடுத்து முடித்த பிறகு அடுத்த மார்பகத்தில் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்குவதன் மூலமும், தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை உறுதி செய்வதன் மூலமும், மார்பகங்களில் பால் கட்டும் பிரச்னை வராமல் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்பகக் கட்டி (Breast abscess):
மார்பகங்களில் பால் கட்டுவது, பால் குழாய் அடைப்பு (blocked milk duct), மார்பக முலைக்காம்பில் வெடிப்பு (cracked nipple), முலையழற்சி (Mastitis) போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், மார்பகக் கட்டி ஏற்படலாம்.
மார்பகக் கட்டி ஏற்பட்டால், காய்ச்சல் மற்றும் மார்பகத்தில் வீக்கம், வலி, சூடாக இருத்தல், சிவந்துபோதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மார்பகக் கட்டி ஏற்பட்டால், மருத்துவர் அறிவுரைப்படி, வலிநிவாரணி மற்றும் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். மார்பகக் கட்டிக்கு கீறல் மற்றும் வடிகால் (Incision and Drainage) அறுவை சிகிச்சை தேவைப்படலாம். தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டும்.

தலைகீழான முலைக்காம்புகள் (Inverted nipples):
தட்டையான முலைக்காம்புகள் (flat nipples) மற்றும் குறுகிய முலைக்காம்புகள் (short nipples), இழுப்பதன் மூலம் வெளிப்படுமென்பதால், தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. எனினும் தலைகீழான முலைக்காம்புகள் (Inverted nipples) மற்றும் உள்ளிழுக்கப்பட்ட முலைக்காம்புகள் (Retracted nipples) தாய்ப்பால் கொடுப்பதை கடினப்படுத்திவிடும். தாய்ப்பால் கொடுக்கும்போது, முலைக்காம்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முகட்டு வட்டத்தின் (Areola) பெரும்பாலான பகுதி குழந்தையின் வாயினுள் இருக்க வேண்டும்.
சிரிஞ்ச் கொண்டு முலைக்காம்பை வெளியே இழுத்தல்
ஆனால், தலைகீழான முலைக்காம்புகள் அல்லது உள்ளிழுக்கப்பட்ட முலைக்காம்புகள் இருந்தால், குழந்தையினால் முலைக்காம்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முகட்டு வட்டத்தினை சரிவர கவ்வ முடியாது. எனவே சரிவர சப்ப முடியாத காரணத்தினால், குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காதது மட்டுமல்லாமல், முலைக்காம்பில் புண்கூட ஏற்படலாம். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒவ்வொரு முறையும் சிரிஞ்ச் (Syringe) மூலம் முலைக்காம்புகளை வெளியே இழுப்பதன் மூலம், சரிவர தாய்ப்பால் கொடுக்க முடியும்.

10 மில்லி சிரிஞ்சின் நடுவிலுள்ள Plunger-ஐ தனியாக வெளியிலெடுக்க வேண்டும். சிரிஞ்சின் முனையிலிருந்து 1 mm தள்ளி, சிரிஞ்சினை வெட்டியெடுக்க வேண்டும். நீக்கப்பட்ட Plunger-ஐ வெட்டப்பட்ட சிரிஞ்சின் முனை வழியாக செருக வேண்டும். சிரிஞ்சினை மார்பகத்தின் மீது வைத்து, Plunger-ஐ 30 முதல் 60 நொடிகள் வரை தொடர்ந்து இழுக்க வேண்டும். Plunger-ஐ வெளியிழுக்கும்போது ஏற்படும் உறிஞ்சும் விசை காரணமாக, தலைகீழான முலைக்காம்புகள் அல்லது உள்ளிழுக்கப்பட்ட முலைக்காம்புகள் வெளியே விடப்படும். அதன்பிறகு, எவ்வித பிரச்னையில்லாமல் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
முலைக்காம்பில் புண் (Sore nipple):
தாய்ப்பால் கொடுக்கும்போது, முலைக்காம்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முகட்டு வட்டத்தின் (Areola) பெரும்பாலான பகுதி குழந்தையின் வாயினுள் இருக்க வேண்டும். மாறாக முலைக்காம்பு மட்டுமே குழந்தையின் வாயினுள் இருந்தால், குழந்தை சப்பும்போது தாய்ப்பால் வெளிப்படாது. எனவே குழந்தை, தீவிரமாக முலைக்காம்பை சப்பவும், கடிக்கவும் தொடங்கும். இதனால் முலைக்காம்பில் புண் ஏற்படலாம்.
சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி மார்பகங்களை சுத்தப்படுத்துவதாலும், குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போதே மார்பகத்திலிருந்து நீக்குவதாலும் கூட முலைக்காம்பில் புண் ஏற்படலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை (Four Steps of Positioning and Attachment) உறுதி செய்வதன் மூலம் இதனை தடுக்க முடியும்.

நான்கு இணைப்பு படிகளை சரியாகக் கடைப்பிடித்தால், முலைக்காம்பில் புண் ஏற்பட்டிருந்தால் கூட சரிவர குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும். தாய்ப்பால் கொடுத்து முடிக்கும்போது இறுதியில் சுரக்கும் தாய்ப்பாலினை (Hindmilk) முலைக்காம்பின் மீது இட்டு வர, புண் சரியாகும்.
தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்ததற்கு பின்பும் அடிக்கடி முலைக்காம்பினை சுத்தப்படுத்த வேண்டாம். குளிக்கும்போது மட்டும் ஒரேயொரு முறை மார்பகம் மற்றும் முலைக்காம்பினை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். முலைக்காம்பின் புண் மீது எவ்வித க்ரிமோ களிம்போ தடவத்தேவையில்லை.
தாய்ப்பாலின் சிறப்புகள் பற்றி அடுத்த வாரம் மிக விரிவாகக் காணலாம்.
பராமரிப்போம்…