திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி அருகே தனியார் சிமென்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உள்ளே 150 ஊழியர்கள் குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தக் குடியிருப்பில் நான்கு ஊழியர்கள் நேற்று வீட்டில் இல்லை. இதையறிந்த மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு வீடுகளின் பூட்டை உடைத்து திருநாவுக்கரசு என்பவரின் வீட்டிலிருந்த 100 சவரன் தங்கநகைகள், பாஸ்கர் என்பவர் வீட்டிலிருந்த பணம் 90,000, செந்தில் என்பவர் வீட்டிலிருந்த பணம் 10,000 ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். வேல்முருகன் என்பவர் வீட்டில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குஜிலியம்பாறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த குஜிலியம்பாறை காவல்துறையினரும், வேடசந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீஸாரும் ஆய்வுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அண்மையில் நடந்த குற்றச் சம்பவங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களா… வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாதுகாப்பாகச் செயல்படும் இந்த சிமென்ட் தொழிற்சாலையின் வளாகத்திலுள்ள ஊழியர்களின் குடியிருப்புப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.