புதுடில்லி: 3 முறை ஒத்திவைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு டில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று(பிப்.,22) துவங்கியது.
புதுடில்லி மாநகராட்சிக்கு டிசம்பரில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பா.ஜ., 104, காங்கிரஸ் ஒன்பது வார்டுகளில் வெற்றி பெற்றன. மூன்று வார்டுகளை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர்.
ஒப்புதல்:
இந்நிலையில், மாநகராட்சிக்கு 10 நியமனக் கவுன்சிலர்களை துணை நிலை கவர்னர் சக்சேனா நியமித்தார்.மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நியமன கவுன்சிலர்களும் ஓட்டளிப்பர் என கவர்னர் அறிவித்தார்.
இதற்கு, ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு மட்டுமே மேயர் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை உண்டு என வாதிட்டது. இதனால், மாநகராட்சி மூன்று முறை கூடியும் மேயர் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 17ம் தேதி விசாரித்தது. நியமன கவுன்சிலர்கள் மேயர் தேர்தலில் ஓட்டுப்போட சட்ட விதிமுறைகளில் இடம் இல்லை என கூறிய நீதிபதிகள், அடுத்த 24 மணி நேரத்துக்குள் மேயர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவனர் சக்சேனாவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதுடில்லி மாநகராட்சி மேயர் தேர்தலை 22ம் தேதி நடத்தலாம் என பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட துணை நிலை கவர்னர் சக்சேனா, பிப்.,22ல் மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்தார்.

3 முறை ஒத்திவைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு டில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று(பிப்.,22) துவங்கியது. இந்த தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கவுன்சிலர்கள், புதுடில்லியில் ஏழு லோக்சபா எம்.பி.,க்கள், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 14 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போடும் தகுதி பெற்று உள்ளனர்.
மொத்தம் 274 பேர் ஓட்டுப் போட்டு புதுடில்லியின் மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
புதுடில்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி, மாநகராட்சியிலும் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதால், மேயர், துணை மேயர் பதவிகளை அக்கட்சியே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய், பா.ஜ., சார்பில் ரேகா குப்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்