ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கியுள்ளார், மேலும், தேமுதிக சார்பில் ஆனந்தன் என்பவரும், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது, வரும் 25 ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் மரப்பாலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெறவில்லை என்று, மேனகா நவநீதன் உள்ளிட்ட 24 பேர் மீது சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..
இதற்கிடையே, தன் மீது போலீசார் தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேனகா நவநீதன் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், “தேர்தல் ஆணையம் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து இருக்க வேண்டும்.
ஆனால், என் மீது வழக்குப் பதிவு செய்து, நாம் தமிழர் கட்சிக்கு, ஆளும் திமுக நெருக்கடி கொடுக்கிறது” என்று தெரிவித்தார்.