பல நகரங்களில் மக்களுக்குப் பயனுள்ள வாகன சேவையாக இயங்கி வரும் ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களில் வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், அப்படியான சேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதியில்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி அரசு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

இந்தத் தடையை மீறினால் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம், ரூ.10,000 வரை அபராதம், ஓராண்டு சிறை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர டாக்ஸிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என இது குறித்து அரசு விளக்கம் அளித்திருந்தது. இதையடுத்து தற்போது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மட்டும் டாக்ஸி சேவையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது டெல்லி அரசு. இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்தக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
வாகனங்களை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளைக் கொண்டு வருவதற்காகவும், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடைப்படையிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு விளக்கமளித்துள்ளது.