சென்னை கீழ்கட்டளையில் ஹரிஹர சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தை அவரின் மனைவி காஞ்சனாவும் சேர்ந்து கவனித்து வருகிறார். இந்த நிறுவனத்திலிருந்து அமெரிக்காவில் செயல்பட்டுவரும் டி.யூ.சி.எஸ் ப்ளாரிஸ் என்ற நிறுவனத்துக்கு கொரோனா மருந்து ஏற்றுமதி செய்யப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.
முதற்கட்டமாக ஹரிஹர சுப்பிரமணியம் மருந்தின் மாதிரிகளை அனுப்பியிருக்கிறார். அதனடிப்படையில் இரண்டு நிறுவனங்களும், 6.29 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளுக்கான ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. அதற்கான தொகையையும் அந்த அமெரிக்க நிறுவனம் ஆன்லைன் மூலமாக இவர்களுக்குச் செலுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக்கொண்ட முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற ஹரிஹர சுப்பிரமணியத்தின் நிறுவனம், போலியான கொரோனா மருந்துகளை ஏற்றுமதி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் குற்றம்சாட்டியிருக்கிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்திருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியம், அவர் மனைவி காஞ்சனா ஆகிய இருவரையும் நேற்று போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சனாவுக்குக் கைக்குழந்தை இருப்பதால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மேலும், அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி ஹரிஹர சுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிறுவனம் டெல்லியிலிருந்து மருந்தை வாங்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.