சென்னை: மதம், இனம், மொழி ரீதியில் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக ரயில்வே கூடுதல் டிஜிபி வி.வனிதா தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த 9-ம் தேதி இரவு வைகை விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் தொழிலாளி ஒருவர் பயணித்தார். நெரிசல் காரணமாக, அவரை சில வடமாநில இளைஞர்கள் இடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், வடமாநில இளைஞர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசி தாக்கியுள்ளார். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொள்வதாக விமர்சித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியது.
இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு கடந்த16-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், 153 ஏ (மதம், மொழி, சமய ரீதியாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 323 (காயப்படுத்துதல்), 294(பி) (ஆபாச பேச்சு) ஆகிய 3 பிரிவின் கீழ் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளியை கண்டுபிடிக்க, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், அந்த நபர் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் விழுப்புரத்தை சேர்ந்த மகிமைதாஸ் (38) என்பதும், ரயிலில் நெரிசல் அதிகமாக இருந்தபோது, வடமாநில இளைஞர்கள் இடித்ததால், உணர்ச்சிவசப்பட்டு தாக்கியதும் தெரியவந்தது.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக ரயில்வே கூடுதல் டிஜிபி வி.வனிதா நேற்று கூறியதாவது:
எந்த ரயில், எப்போது, யாரெல்லாம் பயணித்தார்கள் என்பதை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. ஆர்பிஎஃப், ஜிஆர்பி இணைந்து விசாரித்தனர். சமூக ஊடகங்களில் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, செய்து விட்டு தப்பிவிடலாம் என்று யாரும் கருதக் கூடாது.
மதம், இனம் சாதி, மொழி ரீதியில் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது குற்றம். இதன்மூலமாக, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தால், 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கஞ்சா,போதைப் பொருள் கடத்தலை தடுக்க ரயில்வே போலீஸாரும், ஆர்பிஃஎப் போலீஸாரும் இணைந்து செயல்படுகின்றனர்.