சென்னை ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் அருகில் இருந்த 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த கட்டடங்களில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நில அதிர்வு குறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை முழுவதும் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறுவதால் நில அதிர்வு ஏற்பட்டிருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மெட்ரோ நிர்வாகம் “நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படும் பகுதியில் எந்த மெட்ரோ பணியும் நடைபெறவில்லை. மெட்ரோ பணிகள் ஏற்கனவே முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை” என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில்துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 47,000 பேர் உயிரிழந்தனர். இதனிடையே இந்தியாவில் உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சென்னை நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் தற்பொழுது சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.