புதுடில்லி :’ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் அக்னிவீர் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை’ என, ராணுவ அதிகாரிதெரிவித்தார்.
ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், அக்னிவீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், முதலில் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும். அதற்கு பின் மருத்துவத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
கடைசியாக, பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சில சிக்கல்கள் எழுந்ததன் காரணமாக சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி, ராணுவம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘ராணுவத்தில் சேர விரும்புவோர், முதலில், ‘ஆன்லைன்’ வாயிலான பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.அதற்கு பின், உடற்தகுதி தேர்வு நடத்தப்படும்’ என, தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் பரவிய நிலையில், இந்திய ராணுவத்தின் ஆட்கள் தேர்வு துறைக்கான அதிகாரி லெப்., ஜெனரல் என்.எஸ்.சர்மா கூறியதாவது:
ராணுவத்தில் சேர விரும்புவோர், முதலில் ஆன்லைன் வாயிலாக பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், தேர்வுக்கான பாடத்திட்டத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பழைய முறையில் ஆட்கள் தேர்வு முகாம்களில் ஏராளமானோர் திரள்வதால், ஒவ்வொருவரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், கூட்டத்தை குறைக்கும் வகையிலும் முதலில் பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் இளைஞர்கள் அதிக அளவில் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.எனவே, ஆன்லைன் வாயிலான பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement