அடுத்தடுத்த தொடர் சரிவுகள்… இருப்பினும் கவலைப்படாமல் புதிய முதலீட்டில் இறங்கிய அதானி

அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், 442 மில்லியன் டாலர் முதலீட்டில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருவது எல்லோரும் அறிந்ததே. கடந்த ஜனவரி 24 முதல் அதானி குழுமத்தின் பங்குகள் மொத்தமாக 134 டாலர் பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளன. குழுமத்தின் சந்தை மூலதனம் 100 டாலர் பில்லியனுக்கும் கீழே சரிந்துள்ளது. குறிப்பாக, கடந்த 1 மாதத்திற்குள் அதானி பங்குகள் 60 சதவிகித மதிப்பை இழந்துள்ளன. அதானி குழுமத்தின் தொடர் சரிவால், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில்கூட, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிறுவனங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகின. என்றாலும், அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அதானி குழுமம் செயல்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
image
இப்படி, அதானி குழும பங்குகள் ஒருபக்கம் தொடர் சரிவைச் சந்திக்க, மறுபக்கம் அக்குழுமம் முதலீடுகளையும் அதிகரிகரித்து வருகிறது. அதானி குழுமத்தின் எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், 442 மில்லியன் டாலர் முதலீட்டில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 350 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு காற்றாலை மின் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் அவை தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஒரு வருடமாக இலங்கையில் மின்வெட்டு அதிகரித்து வருவதால் இலங்கையில் போதுமான அளவு அனல் மற்றும் நிலக்கரி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை துரிதப்படுத்த இலங்கை முடிவு செய்துள்ளது. இதனால் மோசமான நிதி நெருக்கடியில் இருந்து விடுபட கடந்த வாரம் இலங்கையில் மின் கட்டணங்கள் 66 சதவீதம் உயர்த்தப்பட்டன.
இந்த நிலையில் அதானி குழும அதிகாரிகள் கொழும்புவில் இலங்கையுடனான பல திட்டங்களை மதிப்பீடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய துறைமுகத்தில் 700 மில்லியன் டாலர் முனையத் திட்டத்தை நிர்மாணிப்பதிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதானி கிரீன் எனர்ஜியின் இந்த காற்றாலை மின் திட்டம் 1,500 முதல் 2,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மின் ஆற்றலை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.