விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் அன்பு ஜோதி ஆதரவற்றோர் ஆசிரம் உள்ளது. இந்த ஆசிரம செயல்பாட்டில் பல்வேறு புகார்கள் எழுந்தன. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய குற்றச்சம்பவங்கள் வெளிவரத் தொடங்கின. ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் தீவிரம் கருதி, விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் நேற்று முன்தினம் சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேல், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று நேரில் சென்று, அவர் வசம் இருந்த ஆசிரமம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், குண்டலபுலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. விழுப்புரம் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான போலீஸார் ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அதில், 20 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று சென்ற சிபிசிஐடி டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீஸார், அங்கு அன்பு ஜோதி ஆசிரமவாசிகளிடம் மருத்துவச் சோதனை மேற்கொண்டது தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர்.
சிபிசிஐடி போலீஸார் கேட்ட விவரங்களை மருத்துவக் குழுவினர் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர்.
மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு நேரிட்ட கொடுமைகள் உள்ளிட்டவை தொடர்பாக முழுமையான அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு விழுப்புரம் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்தவை தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளார்.