அமெரிக்காவில் திருமணம் மறுப்போர் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரிப்பு| 40 percent increase in remarriage in the United States

அமெரிக்காவில் வாஷிங்டனைச் சேர்ந்த பியூ ஆய்வு நிறுவனத் தகவல் படி, துணையின்றி சிங்கிளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 90களில் 29 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது 40 சதவீதத்தை தாண்டியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது. அதில் பாதிப் பேர் டேட்டிங் அல்லது காதல் எதிலும் விருப்பமற்றவர்கள் என தெரிவித்துள்ளனர்.

நம்மூரில் முரட்டு சிங்கிள்ஸ் என சொல்லித் திரிவோர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் துணை கிடைக்காமல் உள்ளுக்குள் புழுங்குபவர்கள் என்ற விமர்சனமும் உள்ளது.

இது பற்றி எழுத்தாளர் ஏஞ்சலா ஹாப்ட் என்பவர் டைம் பத்திரிகையில் கூறியுள்ளதாவது: முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள் தனியாக வாழ்கிறார்கள். சிங்கிள்ஹுட் எனும் தனிமையின் அனைத்து பரிமாணங்களையும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது தான் முழுமையாக புரிந்து கொள்ளத் ஆரம்பித்துள்ளனர். முன்னர் இது பற்றி பெரிதாக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. சிங்கிளாக இருக்க வேண்டும் என்பது யாரை ஈர்க்கிறது, ஏன் ஈர்க்கிறது மற்றும் சிங்கிளாக இருப்பதன் சவால்கள், அது அவர்களின் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் எவ்வாறு பாதிக்கிறது என ஆராய்கின்றனர்.

சிங்கிளாக இருப்பவர்களை முன்னர் சமூகம் பஞ்சிங் பேகாக மாற்றின. ஆனால் தற்போது அந்தநிலை மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திருமண விகிதம் குறைந்து வருகிறது. ஒரு குடும்பம் அல்லது பொருளாதார வசதியை அடைவதற்கு திருமணம் இனி அவசியமில்லை என்ற கருத்து நிலவுகிறது. மகிழ்ச்சிக்காக மட்டுமே திருமணம் என மாறியிருப்பதாக சமூக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காதல் உறவில் இருப்பவர்கள் சிங்கிள்களை விட சிறந்த நல்வாழ்வை, திருப்திகரமான வாழ்க்கையை அனுபவிப்பதாக சான்றுகளுடன் விளக்கியுள்ளனர். அதே சமயம் உறவுகளில் இருக்கும் சிலர் பரிதாபமாக இருக்கிறார்கள். திருமணமாகாதவர்களுடன் ஒப்பிடும் போது, மகிழ்ச்சியற்ற திருமண உறவில் இருப்பவர்கள் மோசமான ஆரோக்கிய விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. சிங்கிளாக இருக்கும் சிலர் விதிவிலக்காக மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அமெரிக்காவில் சிங்கிளாக இருக்கும் பலர் ஏற்கனவே உறவுமுறையில் இருந்து, அதில் கடினமான நேரத்தை அனுபவித்து, அதனால் விவகாரத்து பெற்று சிங்கிளாக உள்ளனர். அமெரிக்காவில் 39% திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. சிங்கிள்கள் பற்றிய ஆராய்ச்சி இதைக் கணக்கில் கொள்ளவில்லை.

சிங்கிள் வாழ்க்கை ஏன்

சிங்கிள் வாழ்க்கையை தேர்வு செய்ய பலர் பல காரணங்களை கூறியுள்ளனர். ஹாப்பி சிங்கிள்ஹுட் புத்தகத்தை எழுதிய எல்யாகிம், சிங்கிள்கள் சுதந்திரம், யாரையும் சார்ந்திராமை, படைப்பாற்றல் ஆகியவற்றை அதிகம் மதிக்கும் நபர்கள் என கூறுகிறார். ஆராய்ச்சிகளும் அதை ஆதரிக்கின்றன. 2022ல் பல நுாறு ஆண்கள், பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சிங்கிளாக இருப்பதால், எங்கள் மீது கவனம் செலுத்த அதிக நேரம் ஒதுக்க முடிகிறது, இலக்குகளில் கவனம் செலுத்தலாம், வேறு யாரும் இதைச் அதைச் செய் என கட்டளையிட முடியாது போன்றவற்றை சிறந்த நன்மைகளாக பட்டியலிட்டுள்ளனர்.

சமூகத்துடன் சேர்ந்திருக்கும் சிங்கிள்கள்

திருமண உறவில் இருப்பவர்கள் துணையுடன் மற்றும் குடும்பத்தினருடன் என உள்வட்டத்திற்கு சென்றுவிடுகின்றனர். காலப்போக்கில் தங்கள் நண்பர்களை இழந்து, பிற்காலத்தில் தனிமையாக உணர்கிறார்கள். மறுபுறம் சிங்கிள்கள், வலுவான சமூக உறவுகளைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அவர்களின் மகிழ்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. சிங்கிள்களுக்கு பொதுவாக அதிக நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து உதவிகளை பெறுகின்றனர். அதே போல் நண்பர்களுக்கு உதவுகின்றனர். திருமணமானவர்களைக் காட்டிலும், சிங்கிள்கள் தங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதற்கும், சந்திப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். சிங்கிள்கள் தனியாக வாழ்வதில்லை, சமூகத்துடன் பிணைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். வீட்டில் தங்குவது குறைவு.

40 வயதில் தனிமை

வயதான சிங்கிள்கள் தங்களின் நிலை குறித்து மகிழ்ச்சியற்று இருப்பதாக ஒரு தவறான கருத்து உள்ளது. சமூக உளவியலாளர் மெக்டொனால்ட் ஆய்வின் படி, 40 வயது தொடங்குகையில் சிங்கிளாக இருப்பது திருப்தி என நினைப்பதாக தெரிய வருகிறது. இவ்வாறு ஏஞ்சலா ஹாப்ட் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.