அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யுமாறு கோரி இன்று (23) மனுவொன்றினை சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்ற அனுமதி
இதனை தொடர்ந்து குறித்த வழக்கினை ஆராய்ந்த சிட்னி நீதிமன்றம் பிணை நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர் மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.