ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வாக்கிற்கு திமுகவினர் ரூ 3 ஆயிரமும், அதிமுகவினர் ரூ 2 ஆயிரமும் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பிரச்சாரம், வரும் 25-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அன்று மாலை முதல் வெளியூரில் இருந்து வந்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
10 நாட்களாக பட்டுவாடா: இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து, தினமும் ரூ 500 முதல் ரூ 1000 வரை பணம் விநியோகம், சுற்றுலா அழைத்துச் செல்லுதல், முக்கிய தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குதல், அசைவ விருந்து வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்து வருகின்றன. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கிற்கு பணம் விநியோகம்: இதன் அடுத்த கட்டமாக, இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வீடு, வீடாகச் செல்லும் திமுக, அதிமுக நிர்வாகிகள், வாக்கின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, நேற்று முன் தினம் இரவு மற்றும் நேற்று காலை முதல் மதியம் வரை திமுக மற்றும் அதிமுகவினர் பல இடங்களில் வாக்குக்கு பணம் வழங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக இன்றும் பணம் விநியோகம் தொடர்ந்து வருகிறது. மேலும், வேட்டி, சேலை, குடம் போன்ற பரிசுப்பொருட்கள் விநியோகமும் பல இடங்களில் நடந்துள்ளது
அசைவத்திற்கு தனி கவனிப்பு: ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பதை ஏற்ககனவே சரிபார்த்து வைத்துள்ள இரு கட்சியினரும், வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்த்து, வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தை வழங்கி வருகின்றனர். சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் அதனைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகிகள் வழிகாட்ட, வெளிமாவட்டங்களில் வந்த கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதோடு, ‘சனிக்கிழமையுடன் நாங்கள் ஊருக்குச் சென்று விடுவோம். எனவே, ஞாயிற்றுக்கிழமை அசைவம் வாங்க, தனியாக ரூ 1000 தருகிறோம்’ எனக் கூறி சில இடங்களில் கூடுதலாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரியாணி விருந்து: இதனிடையே, ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் நேற்று மாபெரும் பிரியாணி விருந்து நடந்தது. திமுக பிரமுகர் வேலு என்பவரது மகள் மகிழினி என்பவரது காதணி விழா என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு பிரியாணி விருந்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தேர்தல் அலுவலரிடம் புகார்: இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன், தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் அளித்த புகார் மனுவில், ‘ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, ஒரு வாக்கிற்கு, திமுக ரூ 3000-ம், அதிமுக ரூ 2000 வழங்குவதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆதாரத்தோடு புகார்: ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும், தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மா.வள்ளிநாராயணன் கூறியதாவது: இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.இது தொடர்பாக புகைப்பட ஆதாரங்களுடன், தேர்தல் ஆணையத்திற்கு 4 முறை புகார் அளித்து விட்டேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, வீடு, வீடாகச் சென்று இரு கட்சிகளும் வாக்கிற்கு பணம் வழங்கி வருகின்றனர். இதற்கு பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
எனது வீட்டுக்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க ஒரு வாக்கிற்கு ரூ 3000-ம், அதிமுகவினர் அவர்களது வேட்பாளருக்கு வாக்களிக்க ரூ 2000-ம் வழங்குவதாகத் தெரிவித்தனர். இந்த பணத்தைப் பெற்று, நான் உங்களுக்கு அடிமையாக விரும்பவில்லை என திருப்பி அனுப்பி விட்டேன். இதேபோல், இரு கட்சிகளும் பணம் கொடுப்பது குறித்து பலரும் என்னிடம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.