ஈரோடு: ‘அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி விரைவில் தேர்வு செய்யப்படுவார்’ என முன்னாள் அமைச்சர் முனுசாமி தெரிவித்தார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ராமலிங்கம், கருப்பணன், கோகுலஇந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. கட்சியை காப்பாற்றுவதற்காக, சட்ட போராட்டம் நடத்தி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, 1.50 கோடி தொண்டர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். தர்மம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்கியதை உச்சநீதிமன்றமும் ஏற்று கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றமே கட்சியில் இருந்து அவர்களை நீக்கியதை சரி என்று சொல்லும் கால கட்டத்தில், அவர்கள் எவ்வளவு தூரம் இந்த கட்சியை எதிர்த்து செயல்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவை அடியோடு ஒழிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு இத்தீர்ப்பு பாடமாக அமையும். அடுத்து பொதுச்செயலாளர் தேர்தல், கட்சி நடவடிக்கை என்பதால், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து விரைவில் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.