லண்டன்:ஐ.எஸ்., அமைப்பில் இணைய லண்டனில் இருந்து சிரியா சென்ற இஸ்லாமிய பெண்ணின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஷமீமா பேகம்,22, என்ற இஸ்லாமிய பெண், 2015ல் நாட்டைவிட்டு வெளியேறி மேற்காசிய நாடான சிரியா சென்றார்.
உத்தரவு
அங்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த இவர், அந்த அமைப்பைச் சேர்ந்தவரை மணந்தார். பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட இவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்தன. சிரியாவில் ஐ.எஸ்., அமைப்பு ஒடுக்கப்பட்டதை அடுத்து, ஷமீமாவை மீட்ட சிரியா ராணுவ வீரர்கள், அங்குள்ள அகதிகள் முகாமில் அவரை தங்க வைத்தனர்.
இதற்கிடையே, பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததால், ஷமீமாவின் குடியுரிமையை 2019ல் பறித்த பிரிட்டன், தங்கள் நாட்டுக்குள் நுழையவும் தடை விதித்தது.
இந்நிலையில், மீண்டும் குடியுரிமை வழங்க வலியுறுத்தி, கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிட்டன் நீதிமன்றங்களில் ஷமீமா மனுத் தாக்கல் செய்து வருகிறார்.
இந்த வழக்குகளில், குடியுரிமை பறிக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், அவர் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறார்.
இதன்படி, சமீபத்தில் லண்டன் நீதிமன்றத்தின் சிறப்பு தீர்ப்பாயத்தில் ஷமீமா தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டதாவது:
ஷமீமா, பாலியல் அடிமையாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார் என்பதற்காக, குடியுரிமை தொடர்பான விஷயத்தில் அரசு சமரசம் செய்து கொள்ள முடியாது.
வரவேற்பு
தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே ஷமீமா செயல்பட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் வைத்து பார்க்கையில் அவரின் குடியுரிமை ரத்து செல்லும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
லண்டன் சிறப்பு தீர்ப்பாயத்தின் முடிவை, பிரிட்டன் அரசு வரவேற்று உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்