அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்ற கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இரு துருவங்களானார்கள்.
எடப்பாடி பழனிசாமி
பக்கம் பெரும்பான்மையான நிர்வாகிகளும், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் ஒரு சில நிர்வாகிகளும் சென்றனர். இரு தரப்பும் அதிமுக எங்களுக்கு தான் என்று கூறி வரும் நிலையில் தொண்டர்கள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
வழக்கு கடந்து வந்த பாதை!
ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது தனி நீதிபதி உத்தரவு அவருக்கு சாதகமாகவும், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கியது.
இன்று தீர்ப்பு!
உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று, எழுத்துபூர்வமாக தங்கள் தரப்பு வாதத்தை தாக்கல் செய்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமா?
இதற்கிடையே இரட்டை இலை சின்னத்துக்கான உரிமையை அவைத்தலைவர், பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி பெற்றார், அத்துடன் சிவசேனா கட்சி வழக்கில் அதிகமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டேக்கு கட்சியும், சின்னமும் சென்றன. இதையெல்லாம் வைத்து எடப்பாடி பழனிசாமி தங்கள் தரப்புக்கு தான் வெற்றி என்று கூறி வருகின்றனர்.
இபிஎஸ் இதை கவனித்தாரா?
ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கின்றனர். “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இடையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது சின்னம் வழங்குவது தொடர்பான பிரச்சனைக்கு தான் இந்த முடிவே தவிர பொதுக்குழு வழக்கில் இந்த முடிவு எதிரொலிக்க அவசியம் இல்லை என்று தெரிவித்தது.
ஆரம்பம் ஓபிஎஸ்ஸூக்கு சாதகம்.. முடிவு யாருக்கு சாதகம்?
அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பு வழங்கும் போது கீழமை நீதிமன்றங்கள் முதன் முதலில் கொடுத்த தீர்ப்பை மேல்முறையீட்டின் போது அதிக மதிப்பு கொடுத்து பரிசீலனை செய்யும். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜூலை 11ஆம் தேதி முறையாக கூட்டப்படாத பொதுக்குழு பற்றி கேள்வி எழுப்பி அந்த பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார்.
உச்சநீதிமன்றமும் இதே கேள்வியை வழக்கு விசாரணையின் போது எழுப்பியிருந்தது. எனவே உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும்” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு பலன் கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.