முதலாம் இணைப்பு
கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (23.02.2023) பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக சென்று கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.