களத்திலிறங்கிய சின்னத்தம்பி; வனத்துறையின் பலமணி நேர போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்டது மக்னா யானை!

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்குச் செல்லாமல் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும், மீண்டும் ஊருக்குள் வந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி அந்த மக்னா யானை, கும்கி யானையின் உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, 6-ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் வனச்சரகத்துக்குட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

யானை

அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாள்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்குச் சென்றது. நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சியிலிருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டருக்கு மேல் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து, நேற்று கோவை பாலக்காடு சாலையிலுள்ள மதுக்கரை பகுதிக்கு வந்தது.

பின்னர் மதுக்கரையிலிருந்து குனியமுத்தூர் பி.கே.புதூர் அருகே காலை முதல் இரவு வரை ஒரே பகுதியில் நின்றது. இன்று காலை 6:00 மணி அளவில் மீண்டும் செல்வபுரம், புட்டு விக்கி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பின்கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணி முதல் புட்டு விக்கி பகுதியிலிருந்து நகரின் முக்கியப் பகுதியான செல்வபுரம் வரை சென்று தெலுங்குபாளையம் வந்து, பின்னர் பேரூர் வந்தடைந்தது. மக்னா யானை செல்லும் வழியில் கிடைக்கும் தென்னை ஓலை, சின்டெக்ஸ் டேங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் உள்ளிட்டவற்றை மட்டுமே உண்டு கடந்து வந்திருக்கிறது. இரவு முழுக்க இடம் தேடி அலையும் மக்னா, பகல் நேரங்களில் புதர்மண்டிய இடங்களில் படுத்து ஓய்வெடுத்து வந்தது.

யானை

இறுதியாக பேரூர் தனியார் கல்லூரி அருகே வந்து முகாமிட்ட யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானை தோட்டத்துக்குள் சமதள பகுதியில் இருந்ததால், அதை அந்தப் பகுதியில் வைத்து ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். மேலும், மேற்கொண்டு யானை நகர்ப் பகுதிக்குச் சென்றால் ஆபத்தான சூழல் ஏற்படும் என்பதால், பேரூர் எஸ்.எம்.எஸ் கல்லூரி பகுதிக்கு சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது.

நொய்யல் ஆற்றை ஒட்டிய படுகையில் யானை ஓய்வெடுத்து வந்த நிலையில், அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்திட அதிகாரிகள் முடிவுசெய்தனர். கால்நடை மருத்துவர்கள் சதாசிவம், பிரகாஷ், சுகுமாரன், மனோகரன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் வனத்துறையினர் களத்தில் இறங்கினர்.

வனத்துறையின் தொடர் முயற்சிக்குப் பிறகு, பிற்பகல் 2 மணி அளவில் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் அருகில் இருக்கும் வாழைத்தோட்டத்தில் மக்னா யானை மயங்கி விழுந்தது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் மக்னா யானையை கயிறுகட்டி வாகனத்தில் ஏற்றும் பணியில் இறங்கினர்.

மக்னா யானை

சின்னத்தம்பி கும்கி யானை, ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேர கடும் போராட்டத்துக்குப் பிறகு, மக்னா யானை வாகனத்தில் ஏற்றப்பட்டது. உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி, அது அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.