புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெராவை, புதுடில்லியில் விமானத்துக்குள் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர். காங்., தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, பவன் கெராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு 28ம் தேதி வரை இடைக்கால ‘ஜாமின்’ அளித்து உத்தரவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவருமான பவன் கெரா, மஹாராஷ்டிராவின் மும்பையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை, நரேந்திர கவுதம்தாஸ் மோடி என குறிப்பிட்டார்.
இது, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வழக்கு பதிவு
இந்த பேச்சு குறித்து உத்தர பிரதேசத்தின் வாரணாசி, லக்னோ மற்றும் அசாமின் ஹப்லாங் ஆகிய இடங்களில் பவன் கெரா மீது, போலீசார் அவதுாறு வழக்குப் பதிவு செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக, காங்., மூத்த தலைவர்களுடன், பவன் கெராவும் நேற்று புதுடில்லியில் இருந்து புறப்பட்டார்.
புதுடில்லி விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்த அவர், ‘இண்டிகோ’ பயணியர் விமானத்தில் அமர்ந்திருந்தபோது, விமானத்துக்குள் வந்து அசாம் போலீசார் அவரை கைது செய்தனர்.
விமானத்தில் இருந்த காங்., மூத்த தலைவர்கள் அனைவரும், விமானம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பவன் கெராவுக்கு ஜாமின் அளிக்கக் கோரி, மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்தார்.
நடவடிக்கை
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் கோரிக்கை விடுத்தார்.
சிவசேனா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த அரசியல் சாசன அமர்வு, இந்த மனுவை நேற்று மதியம் 3:00 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, ”கடந்த 17ம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பவன் கெரா பேசிய பேச்சுக்கு அன்றைய தினமே மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த வழக்கில் கைது நடவடிக்கை தேவையற்றது,” என, சிங்வி வாதிட்டார்.
அசாம் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, காங்., தலைவரின் அவதுாறு பேச்சு தொடர்பான காணொலியை நீதிமன்றத்தில் ஒளிபரப்பினார்.
”ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் குறித்த இப்படிப்பட்ட அவதுாறு கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது. இந்த வார்த்தையை அவர் உள்நோக்கத்துடன் திட்டமிட்டே பயன்படுத்தி உள்ளார்,” என, வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் முறையான ஜாமின் கோரி விண்ணப்பிக்கும் வரை, மனுதாரரின் பாதுகாப்பை மனதில் வைத்து, டில்லியில் உள்ள தகுதிவாய்ந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
இந்த உத்தரவு வரும் 28ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
மூன்று இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே இடத்துக்கு மாற்றக்கோரும் மனுதாரரின் கோரிக்கை குறித்து அசாம் மற்றும் உ.பி., மாநில அரசுகள் பதில் அளிக்க, ‘நோட்டீஸ்’ அனுப்பி உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பின் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வியிடம், ‘நாங்கள் உங்களை காப்பாற்றி இருக்கிறோம். பேசுவதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இனி பேசும் போது கவனம் தேவை’ என, எச்சரித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்