புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அசாம் போலீசார் இன்று (பிப்.23) கைது செய்தனர். டெல்லியிலிருந்து சத்தீஸ்கரின் ராய்பூருக்கு இண்டிகோ விமானத்தில் செல்ல இருந்தவரை தடுத்து நிறுத்தி, விமானத்திலிருந்து இறக்கிய போலீஸார், கேராவை கைது செய்தனர். பிரதமர் மோடியை அவமத்தித்தது தொடர்பான புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவினை இன்று பிற்பகல் 3 மணிக்கு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துத்கொண்டது. அதில் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்திப் பிரிவின் தலைவருமான பவன் கெரா சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, டெல்லியில் இருந்து ராய்பூருக்கு செல்ல இருந்தார். இதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர் இண்டிகோ விமானத்தில் ஏறினார். அப்போது, அவர் மீதான புகாரின் முதல் தகவல் அறிக்கையுடன் விமான நிலையம் வந்த அசாம் போலீசார், பவன் கேராவை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். பவன் கேராவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமான நிலையத்திற்குள் போராட்டதில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து இண்டிகோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இருந்து ராய்பூர் செல்லவிருந்த 6E 204 விமானத்திலிருந்து பயணி ஒருவரை போலீசார் கீழே இறக்கி அழைத்துச் சென்றனர். அவருடன் இன்னும் சில பயணிகளும் தங்களின் விருப்பத்தின் பெயரில் விமானத்தில் இருந்து இறங்கினர். நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படுகிறோம். தற்போது விமானம் தாமதமாகி உள்ளது. பிற பயணிகளுக்கு ஏற்றபட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.
கைது குறித்து கெரா கூறும்போது, “அவர்கள் முதலில் என்னுடைய உடமைகளில் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து என்னால் விமானத்தில் பயணிக்க முடியாது என்றனர். அதனைத் தொடர்ந்து டிசிபி என்னைச் சந்திப்பார் என்றார்கள். நான் நீண்ட நேரமாக காத்திருந்தேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஹிண்டன்பர்க் – அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைத் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “நரசிம்ம ராவால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை உருவாக்க முடியும் என்றால், வாஜ்பாயால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்க முடியும் என்றால், நரேந்திர கவுதம் தாஸ்… மன்னிக்கணும் தாமோதரதாஸ் மோடிக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று பேசினார்.
பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கும்போது கேரா தடுமாறியிருந்தார். ஆனால், இந்த தடுமாற்றம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்று பாஜகவினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பாஜகவினர் பவன் கேரா மீது புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படிடையில், இன்று அசாம் போலீசாரால் பவன் கேரா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.