சென்னை: குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் 2 நாள் பயணமாக தமிழகம் வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை, பொதுத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அரசு, முறைப்பயணமாக பிப்.28-ம் தேதி தமிழகத்துக்கு முதல்முறையாக வருகிறார். 28-ம் தேதி சென்னை ஐஐடியில் நடைபெறும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின் மார்ச் 1-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் டெல்லி செல்கிறார்.
ஆய்வுக்கூட்டம்: இந்நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, பொதுத் துறை செயலர் டி.ஜகந்நாதன், செய்தித்துறை இயக்குநர் த.மோகன், பொதுத்துறை துணைச் செயலர் எஸ்.அனு, மாநகராட்சி வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், ராணுவம், கப்பற்படை, காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.