கொரோனா பயம்… 3 ஆண்டுகளாக வெளியே வரவே இல்லை… நடுங்கவைக்கும் சம்பவம்!

ஹரியானா குருகிராமின் சக்கர்பூர் பகுதியை சேர்ந்தவர் சுஜன் மாஜி. இவர், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி குறித்து, சக்கர்பூர் காவல்நிலையத்தில், அளித்த புகார் அதிர்ச்சிக்கரமான சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

அதாவது, கொரோனா தொற்று பரவல் மீதான அதீத அச்சம் காரணமாக, சுஜன் மாஜியின் மனைவி முன்முன் மாஜி, பள்ளி மாணவனான தனது மகனுடன் கடந்த மூன்று வருடங்களாக வீட்டிலேயே தன்னை தானே பூட்டிக்கொண்டு, அடைப்பட்டிருப்பது அவர் கணவர் அளித்த புகார் மூலம் தெரியவந்தது. 

கதவு உடைப்பு

அவரது புகாரின் பேரில், ஹரியானா காவல் துறையினர், சுகாதார அதிகாரிகள், குழந்தைகள் நலத் துறை உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று அவரது வீட்டிற்கு விரைந்தது. அங்கு வீட்டின், பிரதான கதவை உடைத்து, முன்முன் மாஜியையும் அவரது 10 வயது மகனையும் அந்த குழு மீட்டது. 

சிதறிகிடந்த குப்பைகள்

வீட்டின் உள்ளே அதிகாரிகளுக்கு பயங்கரமான காட்சிகளும் காத்திருந்தன. வீடு முழுவதும் ஆடைகள், முடிகள், குப்பைகள், அழுக்கு நிறைந்த பொருள்கள், சிதறிக்கிடக்கும் மளிகை பொருட்கள் என கடும் துர்நாற்றத்துடன் கூடிய மோசமான சூழல் அங்கு நிலவியது. 

அந்த பெண், தனக்கு, தனது மகனுக்கும் வீட்டிலேயே வைத்து, தலைமுடியை வெட்டியுள்ளார் என தெரிகிறது. இதற்கிடையில், வீட்டில் எரிவாயு அடுப்புக்கு பதிலாக மின்தார இன்டக்ஷன் அடுப்பு மூலம் சமையல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் உள்ள குப்பைகள் கூட வெளியே வீசப்படாமல் இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில், அந்த வீட்டுக்கு வேறு யாரும் வரவே இல்லை.

சூரிய ஒளியையே பார்க்கவில்லை

அந்த சிறுவன், வீட்டுச் சுவர்கள் முழுவதும் ஓவியங்களை வரைந்துள்ளான். பென்சிலை மட்டும் பயன்படுத்தி, அவன் படித்து வந்துள்ளான். கடந்த மூன்று வருடங்களாக அந்த சிறுவன் சூரியனைக் கூட பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளாக இருவரும் வீட்டிற்குள் இருந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அந்தப் பெண் பீதியில் இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறினால் தனது மகன் இறந்துவிடுவார் என்று அவர் நம்பியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மூன்று வருடங்கள் தன் மகனுடன் வீட்டில் அடைந்து இருந்தபோது, அந்தப் பெண் தன் கணவனைக்கூட வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவர் முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, 2020இல் அலுவலகத்திற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு வீட்டிற்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை.

கணவர் சுஜன் மாஜி, வீடியோ கால் மூலம் மட்டுமே அவர்கள் இருவருடனும் பேசி வந்துள்ளார். வீட்டின் மாதாந்திர வாடகை, மின்சாரக் கட்டணம், மகனின் பள்ளிக் கட்டணம் ஆகியவற்றை சுஜன் மாஜி தொடர்ந்து செலுத்தி வந்துள்ளார். மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வாங்கி, ரேஷன் பைகளை கூட பிரதான கதவுக்கு வெளியே வைத்து விட்டு வருவார் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பிறகு, தாய்-மகன் இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.