கோவை மாவட்டம் போரூரில் தஞ்சமடைந்த மக்னா காட்டு யானை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது

கோவை: போரூரில் தஞ்சமடைந்த மக்னா காட்டு யானை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன், சதாசிவம், சுகுமார், பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு யானைக்கு மயக்க மருந்து செலுத்தினர். டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக நுழைந்த யானை, கோவை போரூரில் தஞ்சமடைந்தது. பிடிக்கப்பட்ட யானையை கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

தருமபுரியில் பிடிபட்ட மக்னா காட்டுயானை என்பது டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், அந்த காட்டுயானை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுக்கரை வந்தது. அங்கிருந்து நொய்யல் ஆற்றுப்படுகை பேரூர் அருகே வந்தது. இந்த யானையை தொடர்ந்து அதன் போக்கிலேயே கண்காணித்த வனக்குழு பின்னர் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்வனப்பகுதியில் விடலாம் என திட்டமிட்டிருந்தனர்.

நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்த யானையை காலை முதல் வனத்துறையை சார்ந்த 8 குழுக்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தனர். இதனை தொடர்ந்து 4 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் கும்கி யானையின் உதவி தேவைப்படும் என்பதால் சின்னத்தம்பி யானையும் வரவழைக்கப்பட்டது.

இந்த சூழலில் காலை முதல் வனத்துறையினர் நோட்டமிட்டிருந்த மக்னா யானை நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து அதற்கு மேல் உள்ள வாழை தோப்புக்குள் சென்றது. அங்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு யானையை சுற்றிவளைத்து மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் கும்கியானை உதவியுடன் மக்னா யானையை வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.