பீஜிங், சீனாவில், நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; ௪௮ பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவில், மங்கோலியா பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, சுரங்கம் மூடப்பட்டது.
இதில், சுரங்கத்துக்குள் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 48 பேர் மாயமாகி உள்ளனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட ஆறு தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அருகில் உள்ள பகுதிகளில் இருந்தும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக, சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுரங்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட போதிலும், சமீப காலமாக சீனாவில் சுரங்க விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், ௩௬௭ சுரங்க விபத்துகளில், மொத்தம் ௫௧௮ பேர் பலியாகி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement