சென்னை: சென்னையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகம் போல, தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல் துறை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது என அருங்காட்சியகத்துக்கான ஆலோசகர் ஸ்டீவ் போர்கியா தெரிவித்தார்.
கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை குழு பாதுகாக்கப்படாத அழியும் நிலையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், மொழி, உணவு, உடை, நதிகள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அறக்கட்டளை குழுவினர் நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களை பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டனர். தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் ஆலோசகர் ஸ்டீவ் போர்கியா, அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அப்போது ஸ்டீவ் போர்கியா பேசியதாவது: சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அப்போதுதான் அந்தந்த மாவட்ட மக்கள் அதன் சிறப்புகள், பாரம்பரியத்தை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
சென்னை போலீஸ் அருங்காட்சியகத்தை போல, சோழர்கள் காலத்தில் காவல் துறை எவ்வாறு இருந்தது, மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கினார்கள் என்பது போன்று தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
காவல் துறையைபோல, அனைத்து துறைகளுக்கும் அருங்காட்சியகம் வேண்டும். பழமையை பாதுகாக்க வேண்டும் என்றால் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கும் பழமையான பொருட்களை அருங்காட்சியத்தில் கொடுத்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும். அழியும் நிலையில் உள்ள பழமையான கட்டிடங்களை அரசு கண்டுகொள்ளாவிட்டால், அனைத்து பாரம்பரியமும் அழிந்துவிடும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.