புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடும் அமளி ஏற்பட்டது. ஆம் ஆத்மி மற்றும் பாஜவினர் மாறி மாறி குற்றம்சாட்டி நாற்காலிகளையும், வாக்குப்பெட்டிகளையும் உடைத்தனர். டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்தது. இதில், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜவை ஆம் ஆத்மி வீழ்த்தியது. இதையடுத்து மாநகராட்சி அவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.
தேர்தலை நடத்த தற்காலிக தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் சத்ய சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்திருந்தது. சத்ய சர்மா, பாஜ ஆதரவாளர் என்றும் அவரை எப்படி தேர்தல் அதிகாரியாக நியமிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து சத்ய சர்மா, 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தார். அத்துடன் இவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும் அறிவித்தார்.
இதற்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்த விஷயத்தில், சத்ய சர்மா உறுதியாக இருந்ததால் 3 முறை தேர்தல் நடத்த முயன்றபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தேர்தலை நடத்த முடியவில்லை. இதனையடுத்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆம் ஆத்மியின் வாதத்தை ஏற்று, ‘நியமன கவுன்சிலர்கள் வாக்களிக்க முடியாது’ என்று கூறியது. மேலும் தேர்தல் நடத்த உரிய தேதியை 24 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்றும் கூறியது.
இதனையடுத்து நேற்று 4வது முறையாக டெல்லி மாநகராட்சி அவை கூடியது. முதலில் மேயருக்கான வாக்குப்பதிவும், பின்னர் துணை மேயருக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் எனும் 39 வயதான பேராசிரியை 34 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக முகமது இக்பால் 31 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜ 15 ஆண்டுகளுக்கு பின்னர் மேயர் பொறுப்பை பறிகொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 6 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியது. அதுவரை அமைதியாக இருந்த அவையில், திடீரென அமளி ஏற்பட்டது. வாக்களிக்க கைப்பேசியை எடுத்து வருவதற்கு உறுப்பினர்களை அனுமதிக்க ஷெல்லி ஓபராய் முடிவு செய்தார். இதற்கு பாஜ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த அமளி ஏற்பட்டது. தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜ கவுன்சிலர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இரு கட்சிகளை சேர்ந்த பெண் கவுன்சிலர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும், தேர்தல் நடைபெறும் அரங்கில் இருந்த , தண்ணீர்பாட்டில் மற்றும் பேப்பர் உருண்டைகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இருக்கைகள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.
இது குறித்து மேயர் ஷெல்லி ஓபராய் கூறுகையில்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்த முயற்சிக்கையில் பாஜகவினர் என்னை தாக்க முயன்றனர். அவர்கள் ஒரு பெண் மேயரை தாக்க முயன்றார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் பாஜக தரப்பில், இந்த விஷயத்தில் தீர்வு காண அவர்கள் எங்கள் பேச்சை கேட்டு எங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பதை கூறதான் நாங்கள் மேயர் அருகே சென்றிருந்தோம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மாநகராட்சி தேர்தல் கூட்டம் இரவு முழுவதும் 13 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காலை 8 மணிக்கு மீண்டும் ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.