சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, ராணுவ வீரர் கொலை சம்பவம், ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் குறித்து அவர் புகார் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டது, பாஜக பட்டியலின பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் கடந்த 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம், மெழுகுவத்தி பேரணி நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபு குடும்பத்துக்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, ராணுவ வீரர் கொலை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை வழங்கினார்.
இந்நிலையில், அண்ணாமலை நேற்று காலை திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி செல்லும் அண்ணாமலை அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அப்போது, தமிழகத்தில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேச இருக்கிறார். கர்நாடக தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, அது தொடர்பாகவும் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்த உள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பரவலாக பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுபற்றியும் அமித் ஷாவிடம் தெரிவிக்க உள்ளார்.