தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுக பகுதியில் ரூ.46.14 கோடியில் தடுப்பணை கட்டுமான பணி: நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுகப் பகுதியில் ரூ.46.14 கோடி மதிப்பீட்டில்  நடைபெற்றுவரும் தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்  முக்காணி, சேர்ந்தமங்கலம் மற்றும் புன்னக்காயல் ஆகிய கிராமங்களின் அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுகப் பகுதியில் ரூ.46.14 கோடி மதிப்பீட்டில்  தடுப்பணை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுகப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும்  தடுப்பணையால் அருகில் உள்ள  சேர்ந்தமங்கலம், கைலாசப்புரம், ஆத்தூர், புன்னக்காயல், ராமசந்திரபுரம் மற்றும் முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது. மேலும், தடுப்பணையில் 138 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதுமட்டும்மல்லாமல், கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்  பேச்சிமுத்து, உதவிபொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.