திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதைக்கு ’ஜில்லாபோர்டு ரயில்வே’ என்று பெயர். திருநெல்வேலி ஜில்லா போர்டுவால் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்திற்காக தீர்மானம், கடந்த 01.10.1900-ல் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 23.03.1903-ல் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில்பாதை பணி நடைபெற அனுமதி வழங்கப்பட்டது. 1904-ம் ஆண்டு ’ட்ராபிக் சர்வே’ மற்றும் ‘பிரதம லைன் சர்வே’யும் நடத்தப்பட்டது. 23.02.1923-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் ஆளுநரான கோசன் பிரபுவால் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

அதன் பின்னர், திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையிலான அகல ரயில்பாதை கடந்த 27.09.2008-ல் திறக்கப்பட்டது. தற்போது 100வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இந்த ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலுள்ள ரயில் பாதைகளில் இந்த ரயில் பாதை முக்கியமானதாகும். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இங்கு அமைந்திருப்பதால், கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த ரயில்சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் பாதை வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், ஆறுமுகநேரியைச் சேர்ந்த பொன்னையா. இவர், 1883-ம் ஆண்டு காயல்பட்டினம் உப்பு வர்த்தக கம்பெனியில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உப்பளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பும், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பனைசீசன் காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை வெளியூர்களுக்கு வண்டிகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதனால், பொருள் நஷ்டமும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைத்து ரயில் சேவையைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புறையூர் பங்களாவில் முகாமிட்டிருந்த திருநெல்வேலி ஜில்லா கலெக்டரான பக்கிள்துரையிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். இந்த அகல ரயில் பாதையை இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்குதல் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அந்தப் பணிகள், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைந்த நிலையில், சிறப்பு ரயில் பயணம் மூலம் தெற்கு ரயில்வேயின் ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, முடிவடைந்த மின் பணிகளை ஆய்வு செய்தார்.
திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்த சிறப்பு ரயிலில் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ரயில் தடத்தில் அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் எனக் கூறினார். இந்த விரைவான ரயில் பயணத்தினால் திருச்செந்தூர், முருகன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்பட்டது. 100வது ஆண்டு நிறைவு செய்துள்ள இந்த ரயில்சேவை, விரைவில் மின்சார ரயில்சேவையாக மாறப் போவதால் பயணிகள், முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ரயில்சேவயின் 100வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் நிலையத்தினை சுத்தமாக வைத்திருப்பது, பயணிகள் மூலம் ரயில் நிலையத்தினை மேம்படுத்திட ஆவண செய்வது உட்பட பல உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் ரயில் நிலையம் வந்தடைந்த ரயில் இன்ஜினுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. லோகோ பைலட்டுகளான கருப்பசாமி, விக்னேஷ் ஆகியோருக்கு ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார். ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.