கோவில்பட்டி: தூத்துக்குடி – விருதுநகர் மாவட்டங்களின் எல்லைப் பிரச்சினை காரணமாக சாலை சீரமைக்கப்படாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு கடைக்கோடியில் எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட அயன்கரிசல்குளம் கிராமம் உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் தென்கடைக் கோடியில் கோசுகுண்டு கிராமம் உள்ளது. அயன்கரிசல்குளம் கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அங்குள்ள மக்களுக்கு சாத்தூர், அருப்புக்கோட்டை நகரங்களே அருகே உள்ளன.
இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், மாணவ மாணவியர் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவும் கோசுகுண்டு வழியாகவே செல்லவேண்டி உள்ளது.
அழகாபுரி கிராமத்தில் இருந்து அயன்கரிசல்குளம் வரை உள்ள சாலை விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தை சேர்ந்ததாகும். அதேபோல் என்.மேட்டுபட்டியில் இருந்து கோசுகுண்டு வரை உள்ள சாலை சாத்தூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்தை சேர்ந்ததாகும்.
அயன் கரிசல்குளம்-கோசு குண்டு ஆகியவற்றுக்கு இடையேயான சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. வாகன போக்குவரத்துக்கே தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து, கரிசல்பூமி
விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: இரு மாவட்டங்களின் நெடுஞ்சாலை எல்லை வரையறை செய்யப்படாததால் கோசுகுண்டு – அயன்கரிசல்குளம் சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற குழப்பம் நீடிக்கிறது.
எனவே மாநில நெடுஞ்சாலைத் துறை இதில் கவனம் செலுத்தி மாவட்ட எல்லையை வரையறை செய்து, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள தார்ச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.