மதுரை: தென்காசியில் கரடி தாக்குதலில் இருந்து விவசாயியைக் காப்பாற்ற முயன்றபோது, அதே கரடி தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட இருவருக்கு இழப்பீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பெத்தன்பிள்ளை குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பெத்தன்பிள்ளை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் அடிக்கடி வனவிலங்குகள் விளை நிலங்களில் புகுந்து நாசம் செய்கின்றன. வன விலங்குகள் வளர்ப்பு பிராணிகளை கொல்கின்றன.
என் தந்தை 6.11.2022-ல் காலை 6 மணிக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது வைகுண்டமணி என்பவரை கரடி தாக்கிக் கொண்டிருந்தது. அவரை காப்பாற்ற என் தந்தை முயன்றார். அந்தக் கரடி, தந்தையை தாக்கியது. இதில் தந்தையின் ஒரு கண் கடுமையாக பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். தந்தையின் நுரையீரல், மூளை, தாடை கடுமையான பாதிக்கப்பட்டது. தற்போது வரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
எங்கள் குடும்பம் தந்தையின் வருமானத்தை நம்பியே உள்ளோம். கரடி தாக்குதலால் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. என் தந்தைக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைக்கும், வீரதீரச் செயலுக்கான விருது வழங்கவும், ரூ.20 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் பெத்தன்பிள்ளை குடியிருப்பைச் சேர்ந்த சங்கரநாரயணன் தாக்கல் செய்த மனுவில், ‘கரடி தாக்குதலுக்கு ஆளான வைகுண்டமணியை காப்பாற்ற முயன்றபோது என் தந்தை நாகேந்திரனை கரடி தாக்கியது. இதில் என் தந்தையின் முகம் சிதைந்தது. படுத்த படுக்கையாக உள்ளார். குழாய் வழியாக திரவு உணவு மட்டும் வழங்கப்படுகிறது. காயங்கள் ஆறிய பிறகு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கரடி தாக்குதலால் என் தந்தை கடுமையாக பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதால் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வேலை, ரூ.20 லட்சம் இழப்பீடு, தந்தைக்கு வீரதீரச் செயல் விருது வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”வனவிலங்கு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்க அரசாணை உள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதி, ”அந்த அரசாணை அடிப்படையில் மனுதாரரின் மனுக்களை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சட்டப்படி பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.