பனகல் பார்க் மெட்ரோ போதும்: CMRL பிளானில் டெலிட் ஆன நடேசன் பார்க்… என்ன காரணம்?

தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 128 ரயில் நிலையங்கள் உடன் வரும் 2026ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் (ஊதா வழித்தடம்), கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை (காவி வழித்தடம்), மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் (சிவப்பு வழித்தடம்) ஆகியவை அடங்கும்.

நடேசன் பார்க் மெட்ரோ

குறிப்பாக காவி வழித்தடத்தில் நந்தனம் மற்றும் பனகல் பார்க் இடையில் நடேசன் பார்க் ரயில் நிலையத்தை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) திட்டமிட்டது. அதாவது வெங்கட் நாராயணா சாலையில் உள்ள பள்ளிக்கு அருகே பூமிக்கு அடியில் 20.7 மீட்டர் ஆழத்தில் ரயில் நிலையம் அமையும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

பனகல் பார்க் மெட்ரோ

இதில் பனகல் பார்க் மெட்ரோ என்பது தியாகராய நகர் பகுதி மக்கள் வசதிக்காக அமைக்கப்படுகிறது. இந்நிலையில் நந்தனம் மற்றும் பனகல் பார்க் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து வெறும் 700 மீட்டருக்குள் நடேசன் பார்க் ரயில் நிலையம் வந்துவிடுகிறது. மிகவும் குறைந்த இடைவெளியில் இருப்பதால் தனது திட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்றம் செய்திருக்கிறது.

திட்ட செலவு குறைந்தது

இதேபோல் செயின்ட் ஜோசப் கல்லூரி, போர்ஷோர் எஸ்டேட், டவ்டன் ஆகிய ரயில் நிலையங்களும் வேண்டாம் என நீக்கப்பட்டு விட்டன. இதன்மூலம் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான செலவு 89,000 கோடி ரூபாயில் இருந்து 61,843 கோடியாக குறைந்துள்ளது. டெண்டர் விடும் போதே மேற்குறிப்பிட்ட ரயில் நிலையங்களை CMRL நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அவசர கால வழிகள்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் திட்டப்படி சராசரியாக 900 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் தான் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதுவே சரியாக இடைவெளியாக இருக்கும் எனக் கருதுகிறது. இத்தகைய நடைமுறை தான் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.

சிறுசேரி சிப்காட்டில் மாற்றம்

அதிகபட்சமாக சென்னை சென்ட்ரல் மற்றும் அரசினர் தோட்டம் இடையில் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த வழித்தடத்தில் அவசர கால வழித்தடங்கள் மே தினப் பூங்கா அருகே செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் நீக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு பதிலாக அவசர கால வழிகளை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர சிறுசேரி சிப்காட்டில் பராமரிப்பு பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் திட்ட செலவை குறைக்கும் வகையில் வெறுமனே பார்க்கிங் வசதிகளை மட்டும் கொண்டு வரும் வகையில் மாற்றி அமைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.