புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி லோகேஸ்வரன், மிசோரமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்டப்பவர்களுக்கு பதிலாக, மிசோரம், டெல்லியிலிருந்து புதுச்சேரிக்கு புதிதாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை மாற்றி மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் இன்று பிறப்பித்த உத்தரவில், ”புதுச்சேரியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 2018ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். தற்போது நகரப்பகுதி எஸ்எஸ்பியாக உள்ள தீபிகா, முதல்வர் ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தவில்லை என என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இச்சூழலில் அவர் புதுச்சேரியிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல் புதுச்சேரியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி லோகேஷ்வரன் (2018ம் ஆண்டு பேட்ஜ்) மிசோரமுக்கும் மாற்றப்பட்டுள்ளார். மிசோரமில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி (2017ம் ஆண்டு பேட்ஜ்) குலோத்துங்கனும், டெல்லியில் பணிபுரியும் பிரிஜேந்திர குமார் யாதவும் (2010ம் ஆண்டு பேட்ஜ்) புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.