நெல்லையில் 6-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வரும் 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆதினி எனப் பெயரிடப்பட்ட இருவாச்சி பறவையின் சின்னம் லட்சினையாகத் தேர்வு செய்யப்படத்தை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்து அறிமுகப்படுத்தினார்.

அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உச்சியில் வாழும் இருவாச்சிப் பறவை, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களால் நேசிக்கப்படக் கூடியது. தங்களுக்கு நன்மையாகக் கருதும் இந்தப் பறவை இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவின் இலட்சினையாகத் தேர்வாகியுள்ளது. பின்னர் புத்தகத் திருவிழாவுக்கான அழைப்பிதழை ஆட்சியர் வெளியிட எழுத்தாளர் நாறும்பூநாதன் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்துக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதை ஆட்சியர் கார்த்திகேயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புத்தகத் திருவிழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கார்த்திகேயன், “நெல்லையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அதில் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும். அத்துடன், தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள், சாகித்திய அகாடமி விருதாளர்கள் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், மாணவ மாணவியர் பங்கேற்கும் தொடர் வாசிப்பு நிகழ்ச்சி, இதழியல் பயிற்சிப் பட்டறை, புத்தக வெளியீடுகள் உள்ளிட்டவை நடக்கவுள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி சார்பாக அமைக்கப்படவுள்ள புத்தக அரங்குகளில், கதை, கவிதை, சுற்றுச்சூழல், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்பில் புத்தகங்கள் இடம்பெறும். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்தப் புத்தகத் திருவிழாவானது நெகிழி இல்லாத திருவிழாவாக நடத்தப்படும்.

புத்தகத் திருவிழாவின் ஒரு அங்கமாக சிறை நூலகம், அரசுப்பள்ளி நூலகம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி நூலகங்களுக்குப் புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்புவோரை ஊக்கப்படுத்தும் வகையில், ‘புத்தக பாலம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. புத்தகமாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க விரும்புபவர்கள் வழங்கலாம். பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நிகழ்விவில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்காக மூன்று நாள்கள் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான புத்தகங்கள், கருத்தரங்கங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.