திருமலை: விசாகப்பட்டினத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிபட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கடற்கரையை சுத்தம் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களாக விசாகப்பட்டினத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களை பிடித்து பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் முன்பு நேற்று முன்தினம் ஆஜார் படுத்தினர்.
அவர்களுக்கு கோர்ட்டில் அபராத தொகை விதிக்கவில்லை. அதற்கு மாறாக நூதன தண்டனை வழங்கப்பட்டது. அதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட 52 பேரை விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் உள்ள குப்பைகளை அள்ளி 6 மணிநேரம் கடற்கரையை சுத்தம் செய்யும்படி அனைவருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதனையடுத்து, 52 பேரும் போலீசாரால் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் குப்பை கூளங்களை அகற்றினர்.