மயிலாடுதுறை: பல்வேறு மதத்தினர் இணைந்து நிகழ்த்திய தேவாரப் பாராயணம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் வருகிற மே 24-ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இயற்றிய, ‘ஓருருவாயினை’ எனத் தொடங்கும் தேவாரப் திருப்பதிகத்தினை ஒரு கோடி முறை ஓதுவதற்குத் திட்டமிடப்பட்டது.

பல்வேறு மதத்தினர் இணைந்து பாராயணம் செய்த தேவார திருப்பதிகம்

சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசார்ய சுவாமிகள் முன்னிலையில், அத்திட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கடந்த 12 -ம் தேதி திருக்குவளையில் தொடக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, ஆதீனக் கிளை மடங்கள், ஆதீனக் கல்வி நிலையங்களில் இப்பதிகம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் அனைத்து மதத்தினரும் இணைந்து ‘ஓருருவாயினை’ தேவாரப்பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிகள் பதிகத்தை பாராயணம் செய்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

ஆதீனக் கல்லூரிச் செயலாளர் செல்வநாயகம், இஸ்லாமியர் சார்பில் காங்கிரஸ் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நவாஸ் மற்றும் இப்ராஹீம், கிறிஸ்தவர் சார்பில் மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பவுல்ராஜ், யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேவாரப்பதிகத்தைப் பாராயணம் செய்தனர். ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் பாராயண நிகழ்வு நடைபெற்றது.

தேவார திருப்பதிகம் பாராயணம்

மாணவர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் என 2,600 பேர் தலா 3 முறை என மொத்தம் 7,800 முறை பாராயணம் செய்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து, ஆதீனக் கல்லூரிச் செயலர் செல்வநாயகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விளக்கித் தொடங்கி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.