புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்தது. காலம் தவறி பெய்த இந்த மழையால், நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து வீணாகின. இதேபோல், அறுவடை முடித்து நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த நெல்லும் முளைவிட்டு பாழாகின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்படைந்த விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். ஏற்கனவே 19 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்கொள்முதலுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்வரின் பரிந்துரையை ஏற்று 20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.