நொய்டா, உத்தர பிரதேசத்தில், முதிய தம்பதியின் வங்கி கணக்கில் இருந்து ௮.௨௪ லட்சம் ரூபாய், ‘ஆன்லைன்’ வழியாக திருடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டில், அமர்ஜீத் சிங், ௭௦, அவரது மனைவி ரஜிந்தர் அரோரா வசித்து வருகின்றனர்.
இவர்கள் சமீபத்தில் பாத்திரம் கழுவும் உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை இணைய தளத்தில் தேடியுள்ளனர்.
இதில் கிடைத்த ஒரு எண்ணுக்கு அரோரா போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், அரோராவிடம் வங்கி தகவல்களை பெற்றதுடன், அவருடைய வங்கி கணக்கில் இருந்து ௧௦ ரூபாய் மட்டும் அனுப்பச் சொல்லியுள்ளார்.
அரோராவும் தன் வங்கி கணக்கில் இருந்து ௧௦ ரூபாய் அனுப்பியுள்ளார். இதையடுத்து, போன் இணைப்பு துண்டிக்கப் பட்டது.
இந்த விஷயம் மதியம் நடந்த பின், மாலை ௪:௧௫ மணியளவில் அரோராவின் மொபைல் போனுக்கு, தம்பதியின் கூட்டு வங்கி கணக்கில் இருந்து ௨.௨௫ லட்சம் ரூபாய் எடுக்கப்பட்ட தகவல் வந்துள்ளது.
மறுநாள் காலை, மேலும் ௫.௯௯ லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்தது.
இது குறித்து சைபர் கிரைம் இணையதளத்தில் உடனடியாக புகார் செய்த அமர்ஜீத், ”முதல்முறையாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்து, வங்கி கணக்கை முடக்கக் கூறினேன்.
”அதன் பின்னும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் முதிய தம்பதி. வங்கியில் ‘டிபாசிட்’ செய்துள்ள பணத்திலிருந்து வரும் வட்டியை நம்பி வாழ்ந்து வருகிறோம்,” எனத் தெரிவித்தார். இது குறித்து போலீசார் பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement