புதுடில்லி, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் இருந்து விலை உயர்ந்த ‘ஷூ’க்கள், உடைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, தொழில் அதிபரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
திகார் சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பல சலுகைகளை அனுபவித்ததாகவும் சுகேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, புதுடில்லியில் உள்ள மண்டோலி சிறைக்கு கடந்தாண்டு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.
மண்டோலி சிறையில் சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இதில் உள்ளன. இதில், சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள அறைக்குள் சிறை அதிகாரிகள் தீபக் சர்மா, ஜெய்சிங் ஆகியோர், மத்திய ரிசர்வ் போலீசாருடன் வருகின்றனர்.
அந்த அறையில் உள்ள பொருட்களை அவர்கள் சோதனையிடுகின்றனர்.
இதில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஷூக்கள், விலை உயர்ந்த ஜீன்ஸ் பேன்ட் உள்ளிட்ட உடைகள் மற்றும் சில ஆடம்பர பொருட்களை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் செல்கின்றனர்.
அதிகாரிகள் அங்கிருந்து சென்றதும், அறையின் ஒரு ஓரத்தில் நின்றபடி சுகேஷ் சந்திரசேகர் தேம்பித் தேம்பி அழும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement