வாக்காளர்களை அடைத்து வைக்க சட்டவிரோத கொட்டகைகள்! அதிரும் ஈரோடு இடைத்தேர்தல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் வழக்குகள், மோதல், நீதிமன்ற தீர்ப்பு என அரசியல் களம் உச்சக்கட்ட சூட்டில் இருக்கிறது. இந்த நிலையில், வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது, பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆளும் திமுக, கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், 150க்கும் மேற்பட்ட தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு, வாக்களர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திருமண மண்டபம் மற்றும் சமுதாய கூடங்களிலும் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் பிரசாரம் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர்கள் மற்ற கட்சி உறுப்பினர்களை சந்திக்காமல் இருக்க அவர்களுக்கு உணவு வழங்கி மாலை வரை கொட்டகைளில் தங்க வைக்கப்படுவதாகவும், இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தைரியமாக மீறுவதால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதை பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்காலிமாக அமைக்கபட்டுள்ள கொட்டகைகளில் அதிகாரிகளின் எந்த அனுமதியும் பெறாமலும், எந்தவித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தீயணைப்பு கருவிகள் எதுவும் அமைக்கப்படாமலும், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இல்லாமலும் உள்ளதால், பேரழிவுக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பிப்ரவரி 16ம் தேதி மனு அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

 சட்டவிரோதமாக அமைக்கப்ட்டுள்ள கொட்டகைகளை அகற்றக்கோரியும், வாக்களர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் வழங்குவதை தடுக்கவும், இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.