டெல்லி மாநகராட்சித் தேர்தலுக்கான மறைமுக வாக்குப்பதிவில் ஆம் ஆத்மி கட்சியில் ஷெல்லி ஓபராய் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த ரேகா குப்தா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 250 கவுன்சிலர்கள், டெல்லியில் இருந்து மக்களவைக்கு தேர்வுச் செய்யப்பட்ட 7 எம்.பி.க்கள், மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 274 பேர் வாக்களித்தனர்.
இதில் ஆம் ஆத்மி கட்சியைச் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். பா.ஜ.க.வின் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் அவைக்கு உள்ளேயேயும், வெளியேயும் கொண்டாடினர்.
மேயராக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய், 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மறுபுறத்தில் 15 ஆண்டுகளாக தனது பலமான கட்டுப்பாட்டில் வைத்திருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க. இழந்துள்ளது.
டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெறவிருந்த நிலையில், பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இரண்டு முறை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.