பெங்களூரு,’என் அந்தரங்க புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்கு, 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும்’ என, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி ‘கெடு’ விதித்துள்ளார்.
கர்நாடகாவில், பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அறநிலையத் துறை கமிஷனராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, 39, மீது மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, 47, ‘பகீர்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ரோகிணியின் அந்தரங்க படங்களையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து, இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தன்னை பற்றி ஊடகங்கள் முன்பு பேசுவதற்கு, சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவதற்கு, ரூபா உள்ளிட்ட 60 பிரதிவாதிகளுக்கு தடை விதிக்க கோரி, பெங்களூரு 74வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் ரோகிணி தரப்பில், அவரது வக்கீல் நாகேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது, நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது. வக்கீல் நாகேஷ், ரோகிணி தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
பின் நீதிபதி, ரோகிணி குறித்து சமூக வலைதளங்களில் கருத்து, புகைப்படம் பதிவிட ரூபா உட்பட 60 பிரதிவாதிகளுக்கு தடை விதித்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு, ரோகிணி சார்பில் அவரது வக்கீல் நாகேஷ், ரூபாவுக்கு ஒரு ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.இதில், ‘என் மனுதாரர் பற்றி, நீங்கள் கூறிய அவதுாறு கருத்துகளால், அவர் மன உளைச்சலில் உள்ளார்.இரவில் துாக்கமின்றி தவிக்கிறார். முகநுாலில் அவரை பற்றி பதிவிட்ட கருத்துகள் மற்றும் அந்தரங்க புகைப்படங்களை அழிக்க வேண்டும்.
‘இந்த நோட்டீஸ் உங்கள் கையில் கிடைத்த, 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது, 1 கோடி ரூபாய் கேட்டு நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும்’ என கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்