புதுடெல்லி: ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. புதிய தேசிய கல்விக்கொள்கையின்படி, அடிப்படை கட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் (3 முதல் 8 ஆண்டுகள் வரை) ஐந்து ஆண்டு கற்றல் வாய்ப்பு உள்ளது. இதில் மூன்று ஆண்டுகள் பாலர் பள்ளியும், அதை தொடர்ந்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புக்களும் அடங்கும். அங்கன்வாடிகள் அல்லது அரசு ,அரசு உதவி பெறும் மையங்கள், தனியார் மற்றும் என்ஜிஓக்களால் நடத்தப்படும் பாலர் மையங்களில் மூன்று வயதில் குழந்தைகளை சேர்க்கலாம்.
குழந்தைகள் பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி படிப்பதற்கு அனுமதி உண்டு. ஆனால் ஒன்றாம் வகுப்பு சேரும்போது அந்த குழந்தைகளுக்கு ஆறு வயது நிரம்பி இருக்க வேண்டும். இதன்படி ஒன்றிய கல்வி துறை அமைச்சகம் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான சேர்ப்பதற்கான வயதை ஆறாக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆறு வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளை மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய கல்விதுறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.