புதுடில்லி,அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 6 ஆக உயர்த்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கும்படியும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
‘குழந்தைகளின் உளவியல் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில் வைத்து, அவர்களை மிக இளம் வயதில் பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
மேலும், 2020ல் வகுக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அனைத்து குழந்தைகளும் 3 – 8 வயது வரையில், ஐந்து ஆண்டுகளுக்கு கல்வி பயிலும் வாய்ப்பை கட்டாயம் உருவாக்கித்தர அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, ‘ப்ரீ ஸ்கூல்’ எனப்படும் அங்கன்வாடி கல்வி மூன்றாண்டுகளும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வி இரண்டு ஆண்டுகளும் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.
இதன் விபரம்:
குழந்தைகள் அனைவருக்கும், அங்கன்வாடி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான ஐந்து ஆண்டு கல்வி தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
அங்கன்வாடிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான அடிப்படைக் கல்வியை மூன்றாண்டுகளுக்கு வழங்கும் போது தான், அவர்களுக்கான அடிப்படை கற்றல் மேம்படும்.
மேலும், குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற பாடத்திட்டமும், கற்பித்தலில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பும், இந்த அடிப்படைக் கற்றலை மேம்படுத்துகின்றன.
எனவே, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும்.
அதற்கான வழிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வகுக்க வேண்டும்.
அங்கன்வாடி ஆசிரியர் களுக்கு, டி.பி.எஸ்.இ., எனப்படும் இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு செயல்முறையை மாநில அரசுகள் துவங்க வேண்டும்.
இந்த பாடத்திட்டம், எஸ்.சி.இ.ஆர்.டி., எனப்படும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, அதன் மேற்பார்வையின் கீழ், டி.ஐ.இ.டி., எனப்படும், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்